சசிகலா பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம்: பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி

புதுக்கோட்டை: சசிகலா பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார். புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; சசிகலாவை இணைத்துக் கொண்டால் தான் அதிமுக வலிமை பெறும். சசிகலா பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம். சசிகலா வந்தால் பாஜக வளர உதவியாக இருக்கும், அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

தற்போது ஒன்றிய அரசு 2 முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்து விட்டது என்றார். தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். சசிகலாவுக்கு பாஜக அழைப்பு விடுத்திருப்பது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக சசிகலாவின் வரவு தமிழக பாஜகவுக்கு உறுதுணையாக இருக்கும் என பொதுவெளியில் அக்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே விழாவுக்கு வந்த பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி: பாஜவின் 8 ஆண்டு கால சாதனையை தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே சென்று எடுத்து கூறுவதுதான் பாஜவின் அடுத்த இலக்கு. தேர்தல் அறிக்கையில் திமுக கூறியவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும். அதுவரை பாஜவின் போராட்டம் தொடரும். இவ்வாறு கூறினார்.

Related Stories: