வைகோவுடன் திடீர் சந்திப்பு பாமக தலைவராக பதவி ஏற்றது ஏன்? அன்புமணி விளக்கம்

சென்னை: பாமகவின் தலைவர் என்றும் ஜிகே மணி தான். 2.0 திட்டத்திற்காக தான் நான் தலைவராக பதவியேற்றேன் என்று அன்புமணி தெரிவித்தார். பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி நேற்று சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.  அப்போது,  அன்புமணிக்கு ஆளுயுர  மலர்மாலை, சால்வை அணிவித்து வைகோ வாழ்த்து தெரிவித்தார்.  இந்த சந்திப்பின் போது, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி , மதிமுக தலைமை கழக செயலாளர்  துரை வைகோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அன்புமணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது பல்வேறு சாதனைகளை சாதித்திருக்கிறார். இந்த காலகட்டத்தில் அவர் இந்த பொறுப்புக்கு  வந்திருப்பது தமிழ் நாட்டிற்கும் இளைய தலைமுறைக்கு நல்லது’ என்றார்.

மேலும், இது குறித்து பாமக தலைவர் அன்புமணி கூறியதாவது: பாமகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து வருகிறேன். அந்த வகையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். பாஜ தலைவர் அண்ணாமலை ஊடகங்கள் குறித்து பேசியது தவறு. ஊடகங்கள் தான் சமுதாயத்தின் 4வது தூண். அவர்களை என்றும் போற்ற வேண்டும். நல்ல மாற்றங்கள் அவர்கள் மூலம் தான் வருகிறது. பாமகவின் தலைவர் என்றும் ஜிகே மணி தான். 2.0 திட்டத்திற்காக தான் நான் தலைவராக பதவியேற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: