ஊட்டியில் மங்குஸ்தான் பழ விற்பனை அமோகம்-கிலோ ரூ.250க்கு விற்பனை

ஊட்டி :  ஊட்டியில் மங்குஸ்தான் பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கிலோ ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மலை  மாவட்டமான நீலகிரியில் ரம்பூட்டான், மங்குஸ்தான், பிளம்ஸ், பீச், ஆரஞ்சு  உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் விளைவிக்கப்படுகின்றன. தமிழகத்தின் நீலகிரி  மாவட்டம் கூடலூர், கல்லாறு மற்றும் குற்றாலம், குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மங்குஸ்தான் பழம் விளைவிக்கப்படுகிறது.

ஜூன் மாதம்  துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை மங்குஸ்தான் பழ சீசன் ஆகும். மங்குஸ்தான் பழம்  பழங்களின் அரசி என அழைக்கப்படுகிறது. மரங்களில் கொத்து கொத்தாக காய்த்த  இந்த பழங்கள் நன்கு பழுத்தவுடன் மேல்பகுதி ஓடு கடினத்தன்மையை இழந்து  விடும். ஒட்டை பிரித்தால் உட்புறம் சிறிது புளிப்பு கலந்த இனிப்பு  சுவையுடன் பழ சுளைகள் இருக்கும். பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மங்குஸ்தான்  பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்கின்றனர். தற்போது, மங்குஸ்தான் பழ சீசன் முன்கூட்டியே துவங்கியுள்ள நிலையில்  சுற்றுலா நகரமான ஊட்டியில் உள்ள பழக்கடைகள், தாவரவியல் பூங்கா சாலையில்  உள்ள கடைகள், தள்ளுவண்டி கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

 உள்ளூர் பழங்கள் மட்டுமின்றி குற்றாலம் மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து  இவற்றை வியாபாரிகள் வாங்கி வந்து விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இவற்றை  உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வாங்கி செல்கின்றனர்.  ஊட்டியில் மங்குஸ்தான் பழம் கிலோ ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு  வருகிறது.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘மங்குஸ்தான் பழம்  உடல் சூடு, வயிற்றுபுண், வயிற்றுவலி போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல்  கொண்ட மருத்துவ குணம் வாய்ந்தது. தற்போது, மங்குஸ்தான் பழ சீசன் காரணமாக  குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விற்பனை  செய்து வருகிறோம். ஊட்டியில் கோடை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளும்  அதிகளவு வாங்கி செல்கின்றனர்’ என்றார்.

Related Stories: