நடிகர்கள் விளம்பரத்தை பார்த்து யாரும் ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டாம்: பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்

சென்னை: நடிகர்களின் விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு யாரும் பணத்தை இழக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ பதிவு மூலம் கூறியிருப்பதாவது:

எல்லோருக்கும் வணக்கம். இணையதளத்தில் நடக்கும் மற்றும் ஒரு மிகப்பெரிய மோசடி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பதுபோல் பரிசு கிடைத்து விடும். பிறகு ஆசையை தூண்டி விட்டு பின்பு உங்கள் பணத்தை இந்த விளையாட்டில் முதலீடு செய்ய வைக்கும். முதலில் விளையாடும்போது பணத்தை இழந்து விடுவோம். பிறகு அந்த பணத்தை மீண்டும் பெறும் வகையில் திரும்ப திரும்ப உங்களை ரம்மி விளையாட வைத்து உங்களிடம் உள்ள அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கிவிடும்.

இதன் மூலம் பல லட்சம் பணத்தை இழக்க நேரிடும். பிறகு நகையை வைத்து பணம், கடன் வாங்கிய பணம் என அனைத்து பணத்தையும் இழக்க நேரிடும். இது உண்மையான ஆன்லைன் விளையாட்டு கிடையாது. இது ஆன்லைன் மோசடி விளையாட்டு. இதை நன்றாக புரிந்து கொண்டவர்கள் பலர் பணத்தை இழந்துள்ளனர். இதுதொடர்பாக நிறைய வழக்குகள் இருக்கிறது.

ஏற்கனவே அரசாங்கம் இதை தடை செய்ய அரசாணை அறிவித்தும், இதற்கு ஒரு தனி சட்டம் இயற்றி நீதிமன்றம் வரை சென்று தடை வாங்கப்பட்டுள்ளது. பொது மக்களாகிய நீங்கள் தயவு செய்து இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குள் போகவே போகாதீங்க.

எனவே இதுபோன்ற விளம்பரம் வருகிறது. ஒரு சினிமா நடிகர் கூட வருகிறார் என்று போய் ஆன்லைன் ரம்மி விளையாட போகாதீங்க. இது உண்மையான ஆன்லைன் ரம்மி அல்ல. இது ஆன்லைன் ரம்மி மோசடி. இந்த காணொலி கண்ட பிறகும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நீங்கள் விளையாட சென்றால். நீங்கள் மிகப்பெரிய தவறை செய்கிறீர்கள். பேராசை உங்களிடம் இருக்கிறது. எக்காரணத்தை கொண்டு எந்த மனிதனும் வங்கியை விட அதிக வட்டி விகிதத்தில் பணத்தை கொடுக்க முடியாது.

அந்த அளவுக்கு அவர்கள் பெரிய அளவில் பணத்தை சம்பாதிக்க முடியாது. அவங்க பணத்தை உங்களுக்கு யாருக்கும் தர மாட்டாங்க. தர வேண்டிய அவசியமும் கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தயவு செய்து யாரும் ஈடுபட வேண்டாம். இதில் உங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும், அவமானம் ஏற்படும், குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படும், தற்கொலை செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை கூட வர வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு வேண்டவே வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: