முல்லைத்தீவு உட்பட 25 மாவட்டங்களில் தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் இலங்கையில் தமிழர்களுக்கு விநியோகம்: நேற்று முதல் தொடங்கியது

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு 40 ஆயிரம் டன் அரிசி, உயிர் காக்கும் மருந்துகள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், நிவாரணப் பொருட்களையும் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றினார்.

இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக சென்னை துறைமுகத்தில் இருந்து கடந்த வாரம் 9 ஆயிரம் டன் அரிசி, 200 டன் ஆவின் பால் பவுடர், 25 டன் எடையுள்ள அத்தியாவசிய மருந்து பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இப்பொருட்கள் சில தினங்களுக்கு முன் கொழும்பு சென்று சேர்ந்தது. இந்நிலையில், இந்த பொருட்களை தமிழர்களுக்கு விநியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. முல்லைத்தீவு, அம்பாரா, உட்பட 25 மாவட்டங்களில் வசிக்கும் ஏழை தமிழர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் உட்பட அத்தியாவசிய  மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை பெற்று வரும் தமிழர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இலங்கை உணவுத் துறை ஆணையர் ஜே.பி.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘‘இலங்கை மக்களின் ‘கோ பேக் ராஜபக்சே’ போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தமிழக அரசு வழங்கிய நிவாரணப் பொருட்கள் ரயில்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழக அரசு வழங்கிய 9 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியும், இதர பொருட்களும் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தக் கட்டமாக மேலும் 31 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தமிழக அரசு வழங்க உள்ளது. அவை வந்து சேர்ந்ததும் மக்களுக்கு வழங்கப்படும்,’’ என்றார்.

Related Stories: