செங்கத்தில் இருந்து புதுச்சேரிக்கு கடத்திய 10 கிலோ சந்தன கட்டை பறிமுதல்: வாலிபர் கைது

விக்கிரவாண்டி: செங்கத்தில் இருந்து புதுச்சேரிக்கு கடத்திய 10 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் தொரவி செல்லும் சாலையில் விக்கிரவாண்டி சப்- இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாலை சுமார் 5 மணி அளவில் தொரவி அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்குரிய மர்ம நபர் நின்று கொண்டிருப்பதை போலீசார் அறிந்து அவரிடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வாலிபர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த சின்னகிருஷ்ணன் (44) என்பதும் அவர் செங்கம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சுமார் 10 கிலோ எடைகொண்ட சந்தனக்கட்டையை புதுச்சேரிக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி போலீசார் அந்த வாலிபரை கைது செய்து, சந்தனக்கட்டையை எப்படி கிடைத்தது, யாரெல்லாம் கூட்டாளிகள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: