கோயில் திருவிழாவை முன்னிட்டு பெரியபுத்தூரில் எருதாட்டம்-பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு

சேலம் :  சேலம் அடுத்த பெரிய புத்தூரில் முனியப்பன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, எருதாட்டம் நடந்தது. பாதியில் எருதாட்டம் நிறுத்தப்பட்டதால், இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சேலம் அடுத்த கொண்டலாம்பட்டி பெரிய புத்தூரில் வெண்ணங்குடி முனியப்பன் கோயில் உள்ளது. கோயிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, நேற்று எருதாட்டம் நடந்தது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தது. சேலம் ஆர்டிஓ விஷ்ணுவர்த்தினி, தாசில்தார் தமிழரசி முன்னிலையில், அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே எருதாட்டம் தொடங்கியது. அலங்கரித்த காளைகளை மைதானத்தில் விட்டு இளைஞர்கள் உற்சாகப்படுத்தினர். மேலும், பொம்மைகளை கொண்டு விளையாட்டு காட்டினர்.

இதனிடையே எருதாட்டத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த, பெரிய புத்தூரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் பிரேம்குமார் (15) என்ற சிறுவனை காளை முட்டியது. இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். மேலும், ஒரேநேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து வந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் மைதானத்தில் திரண்டதால், வருவாய்த்துறை அதிகாரிகள் பாதியிலேயே எருதாட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், எருதாட்டத்தை காணவந்த இளைஞர்களும், பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: