குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட குழந்தைகள் நல குழுமம் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமைதாங்கி துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் பாதுகாப்பிற்காக 1098 என்ற எண்ணை அழைத்தால் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அலகு வாயிலாக தொடர்பு கொள்வார்கள். போக்சோ சட்டம் என்பது ஒரு கடுமையான சட்டம் ஆகும். இந்த சட்டத்தில் எப்படி புகார் தெரிவிக்க வேண்டும். இந்த சட்டத்தில் புகார் வந்தால் என்னென்ன நடவடிக்கைகள் போலீசார் எடுக்க வேண்டும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த போக்சோ சட்டத்தின் அடிப்படையில் பாதகமாக ஒரு செயல் நடப்பது தெரிய வந்தால் அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற சந்தேகங்கள் நம் அனைவருக்கும் இருக்கும். எனவே இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்குத் தான் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களை  கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து தன்னார்வலர்கள் பயிற்சி அளிக்கின்ற இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தி, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிபுதத்தா தாஸ், குழந்தைகள் நலக்குழு தலைவர் மேரி அக்ஸிலியா, டிஎஸ்பி சந்திரதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: