தேவர்சோலை அருகே சேதமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

ஊட்டி: ஊட்டி - மஞ்சூர் சாலையில் தேவர்சோலை அருகே தடுப்புசுவர் கட்டி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் சாலை சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மஞ்சூர் பகுதிக்கு சாலை உள்ளது. இச்சாலை வழியாக கைகாட்டி, தங்காடு, அறையட்டி, மஞ்சக்கொம்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. முக்கிய சாலை என்பதால் எப்போதும் நெரிசல் இருக்கும்.

இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு இச்சாலையில் தேவர்சோலை அருகே குறுகலாக இருந்த பகுதியை விரிவாக்கம் செய்வதற்காக பள்ளம் தோண்டும்போது சாலை முழுமையாக இடிந்து விழுந்து இச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சுமார் 3 மாதங்களுக்கும் மேல் போக்குவரத்து பாதிப்படைந்த நிலையில், பெரிய அளவிலான தடுப்புசுவர் கட்டப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், விரிவாக்கம் செய்த பகுதி சமன் செய்யாமல் குண்டும் குழியுமான நிலையில் உள்ளது.

சில இடங்களில் கற்கள் நீட்டியபடி உள்ளன. இதன் காரணமாக, விரிவாக்கம் செய்தும் வாகனங்களை சீராக இயக்க முடியாத நிலை நீடிக்கிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அப்பகுதியை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி விரிவாக்கம் செய்யப்பட்ட இப்பகுதியில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories: