இரு தரப்பினரின் இடையே மோதல் துணைத் தலைவர் தேர்தல் மீண்டும் நிறுத்தம்

ஸ்ரீபெரும்புதூர்: வரதராஜபுரத்தில் நடந்த துணைத் தலைவர் தேர்தலில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால், மீண்டும் நிறுத்தப்பட்டது. குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு ஏற்கனவே 2 முறை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால், தேர்தல் நிறுத்தப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று மீண்டும் துணை தலைவர் தேர்தல் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் பதவியை கைப்பற்றுவதற்காக வரதராஜபுரம் ஊராட்சி 4வது வார்டு உறுப்பினர்  தெய்வகனி அருணாச்சலம், 2வது வார்டு உறுப்பினர்  ஸ்டாலின் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்டாலின், அவரது மனைவி ராதிகா ஆகியோர் தனது காரில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு சென்று  கொண்டிருந்தனர். அப்போது,  ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணியின் ஆதரவாளர்கள், ஸ்டாலின் காரை வழிமறித்து, முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதனை தட்டி கேட்ட அவரது மனைவி ராதிகாவின் தலைமுடியை பிடித்து, அடித்து உதைத்துள்ளனர்.தகவலறிந்து சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து ராதிகா, போலீசில் புகார் அளித்தார். அதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னையும், தன் கணவரையும் தாக்கினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.  இதற்கிடையில், இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலால், துணைத் தலைவர் தேர்தல் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

Related Stories: