தொழிலாளி மர்மச்சாவு: மனைவி புகார்

திருப்போரூர்:  திருவண்ணாமலை மாவட்டம், வாழச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (50). கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்து. திருப்போரூர் அருகே காயார் பகுதியில் கட்டப்பட்டு வரும் தனியார் பள்ளி கட்டுமான பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 18ம் தேதி கதில்வேல் வேலைக்கு சென்றார். அன்று, அவருடன் பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர், முத்துவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அதில், வேலை செய்த இடத்தில் கதிர்வேல் மாரடைப்பால் இறந்து விட்டார் என கூறியுள்ளார்.

 இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த  உறவினர்கள், சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.  இறுதி சடங்கு செய்யும்போது, கதிர்வேலின் உடலில் தீக்காயம் மற்றும் தலையில் காயம் இருந்தது தெரிந்தது.  அதை புகைப்படம்  வீடியோவாக உறவினர்கள் எடுத்து வைத்தனர். பின்னர் உடல் அதே கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில், கதிர்வேல் மனைவி முத்து, நேற்று காயார் காவல் நிலையம் சென்றார். அங்கு, தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார். மேலும், தீக்காயம் மற்றும் தலையில் காயம் இருந்த புகைப்படத்தையும் புகாருடன் இணைத்து கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: