வேலூர் அருகே கோயில் திருவிழாக்கள் நடத்துவதற்கு முன் ஆவியை வீட்டிற்கு அழைக்கும் வினோதம்

வேலூர்: வேலூர் அருகே மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்கள், தங்கள் ஊர் திருவிழாவுக்கு முன்னதாக இறந்தவர்களின் ஆவியை வீட்டுக்கு மேளதாளத்துடன் அழைத்து வரும் விநோத நிகழ்ச்சி நடந்தது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அத்தியூர் ஊராட்சியில் குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல்மலை, பள்ளகொல்லைமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் மக்கள் ஆண்டுதோறும் செல்லியம்மன், தஞ்சியம்மனுக்கு திருவிழா நடத்துகின்றனர். அவ்வாறு திருவிழா நடத்துவதற்கு முன்பு குறி கேட்டு, கடந்தாண்டு இறந்த மலைவாழ் மக்களின் ஆவியை வீட்டுக்கு அழைத்து வரும் விநோத நிகழ்ச்சி நடப்பது வழக்கமாம். அதன்படி, இந்தாண்டு விழா நடத்தும் வகையில் கடந்த 21ம்தேதி கோயில் அருகே பொங்கல் வைத்து வழிபட்டனர். அன்றிரவு குறி கேட்டனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பெண்கள் கும்மியடுத்து இறந்தவர்களது ஆவியை கூவிக்கூவி அழைத்தனர். அவ்வாறு வந்ததாக கருதிய ஆவியை மலையின் நுழைவு வாயிலில் இருந்து மேளதாளம், கரகம், சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக அழைத்து சென்று அவர்களின் வீடுகளில் விட்டு சென்றனர். அப்போது அவர்கள் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர். இதையடுத்து ஆடு, கோழிகள் பலியிட்டு அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. தொடர்ந்து, மீண்டும் குறி கேட்கப்பட்டு அது உத்தரவு தரும் நாளில் திருவிழா நடத்துவார்களாம். அதன்படி இன்னும் சில நாட்களில் விழா நடக்கும் என்று மலைவாழ் மக்கள் கூறினர்.

Related Stories: