வாணியம்பாடி அருகே இப்படியும் அவலம் ஓட்டல் உரிமையாளரின் உடலை டோலி கட்டி 7 கி.மீ. தூரம் தூக்கி சென்ற மலை கிராம மக்கள்-முடிவுக்கு வருமா 50 வருட கோரிக்கை

திருப்பத்தூர் :  பெங்களூரில் இறந்த ஓட்டல் உரிமையாளரின் சடலத்தை வாணியம்பாடி அருகே மலைவாழ் மக்கள் டோலிகட்டி 7 கி.மீ தூரம் தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மலை கிராமத்தில் வசித்து வரும் மலைகிராம மக்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அத்தியாவசிய தேவைகளுக்கே அல்லல் பட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதுவரை பலமுறை சாலை வசதி வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் மனு வழங்கியும் இன்று வரை சாலை வசதி செய்து தரப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுடைய அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனை, நியாயவிலை கடை, மளிகை பொருட்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சென்றுவர வேண்டுமேயானால், காட்டுப் பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு, மலை கிராம மக்கள் தற்காலிக மண் சாலையை அமைத்தனர். இந்த தற்காலிக மண் சாலையானது மழை காலங்களில் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து விடுகிறது.

ஒவ்வொரு முறை மண் சாலை சேதமடையும் போதும், ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலையை சீரமைத்து பயன்படுத்தி வந்தனர். இந்த தற்காலிகமான சாலையை பயன்படுத்தி தினமும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெள்ளக்குட்டை மற்றும் வாணியம்பாடி பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெங்களூரு பகுதியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வந்த மலை கிராம பகுதியை பகுதியைச் சேர்ந்த சரவணன் (50) என்பவர் சிறுநீரக தொற்று காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார்.

அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். இதற்காக சரவணனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக மலைகிராம மக்கள் அமைத்திருந்த தற்காலிக மண் சாலை பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதம் அடைந்த காரணத்தினால், ஆம்புலன்ஸ் வாகனம் மலை அடிவாரத்திலேயே நிறுத்தப்பட்டது.

பின்னர் சரவணனின் சடலத்தை உறவினர்கள் டோலி கட்டி சுமார் 7 கிலோமீட்டர் தூரம், தூக்கிக்கொண்டு சென்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஞ்ஞானம் வளர்ந்த இந்த நவீன காலத்திலும் இறந்தவரின் சடலத்தை டோலி கட்டி தூக்கி செல்லும் அவல நிலை அரங்கேறுவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Related Stories: