ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியது ரூ.26.77 குறைத்தது ரூ.14.50: ஒன்றிய அரசு மீது கே.எஸ்.அழகிரி தாக்கு

சென்னை: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியேதா ரூ.26.77, குறைத்ததோ ரூ.14.50 மட்டுமே என்று ஒன்றிய பாஜ அரசு மீது கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ அரசு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த போது கூட பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரி விதித்து, கடந்த 8 ஆண்டுகளில் 27 லட்சம் கோடி ரூபாய் வருவாயை பெருக்கிக் கொண்டது. இதனால், சமீபகாலமாக பணவீக்கம் 95 மாத உயர்வாக கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவிகிதமாக உயர்ந்து விட்டது. உணவு பணவீக்கம் 8.38 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால், அனைத்து பொருட்களின் விலையும் ஏறுவதை எதிர்கொள்ள முடியாமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பாஜ அரசு பெயரளவில் குறைத்திருக்கிறது. ஆனால், உண்மை நிலையை ஆய்வு செய்யும் போது இந்த விலை குறைப்பினால் சில்லரை பணவீக்க அளவில் 0.15 சதவிகித புள்ளிகள் அளவில் தான் பயன் தரும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே, மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து கண் துடைப்பு நாடகத்தை நடத்தியிருக்கிறது. ஒன்றிய பாஜ அரசு 12 தவணைகளில் கலால் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.26.77 உயர்த்தியது. ஆனால் குறைத்தது ரூ.14.50 மட்டுமே.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: