வரும் 28ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: வரும் 28ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்/ பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 28ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் ஜூன் 3, முத்தமிழறிஞர் கலைஞரின் 99வது பிறந்த நாள் பொருள் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து கலைஞர் பிறந்தநாள் விழாவை இந்தாண்டு கோலாகலமாக கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ளனர். மேலும், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே வரும் 28ம் தேதி மாலை 5.30 மணியளவில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் முழு உருவ சிலை திறப்பு விழா நடக்கிறது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்துகொண்டு சிலையை திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையுரையாற்றுகிறார். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: