தமிழகத்தில் 364 சீட்டு நிறுவனங்களின் பதிவு ரத்து: பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் பதிவுத்துறை நடவடிக்கை

சென்னை: பொதுமக்களின் புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த 364 சீட்டு நிறுவனங்களின் பதிவை ரத்து செய்து பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் சிட்பண்ட் நிறுவனம் நடத்துவோர் மற்றும் ஏலச்சீட்டு நிறுவனங்கள் பதிவுத்துறை சீட்டு பதிவு அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். இதற்காக, சீட்டு நடத்தப்படும் தொகை, சீட்டு முடியும் காலம் வரை உரிய தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கான ஆவணத்தை பதிவுத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்பிறகு 5 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட ஏலச்சீட்டுகளை நடத்த வேண்டும். இல்லையெனில் அது சட்டத்துக்கு புறம்பான சீட்டு என்றே கருதப்படும். இந்த சீட்டு நிறுவனங்களில் சேரும் சந்தாதாரர்களால் செலுத்தப்படும் பணத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கும் நோக்கில், சீட்டு நிதிகள் சட்டம் 1982 மற்றும் தமிழ்நாடு சீட்டு விதிகள் 1984 ஆகியவை இயற்றப்பட்டுள்ளன.

இதன் மூலம் மாநிலத்தில் உள்ள பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்களில் செயல்பாடு பதிவுத்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின் கீழ் பதிவுத்துறை தலைவர் பதிவாளராகவும், கூடுதல் பதிவுத்துறை தலைவர் கூடுதல் பதிவாளராகவும், துணை பதிவுத்துறை தலைவர்கள் இணை சீட்டு பதிவாளராகவும், மாவட்ட பதிவாளர்கள் துணை சீட்டு பதிவாளர்களாகவும், சார்பதிவாளர்கள் உதவி சீட்டு பதிவாளர்களாகவும் செயல்படுகின்றனர். அவர்களிடம் வரும் புகாரின் பேரில் சீட்டு நிறுவனங்களை ஆய்வு செய்கின்றனர்.

அந்த நிறுவனங்களில் மீது குற்றச்சாட்டு ஊர்ஜிதமானால் அந்த சீட்டு நிறுவனங்கள் பதிவு ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் கடந்தாண்டில் மட்டும் 364 சீட்டு நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது, 2621 சீட்டு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், அந்த நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், பதிவு பெறாமல் சீட்டு நடத்தப்படுவது தெரிய வந்தால் அந்த நிறுவனங்கள் மீது வழக்கும் பதிவு செய்யவும், அந்த அந்த நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .

Related Stories: