ஐசிஎப் கேரேஜ் பணிமனையில் ஆர்பிஎப் ஏட்டுக்கு சரமாரி கத்திக்குத்து: தப்பிய காவலர் மர்ம மரணம்

அம்பத்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (46). ஆர்பிஎப் தலைமை காவலரான இவர், சென்னை ஐசிஎப் கேரேஜ் பணிமனை மெயின் கேட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடன், ஆரோக்கியசாமி (49) என்ற ரயில்வே காவலர் பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன், ஆரோக்கியசாமி, ஜெயப்பிரகாஷ் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு பணிமனைக்கு போதையில் வந்த ஆரோக்கியசாமி, அங்கிருந்த ஜெயப்பிரகாஷிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயப்பிரகாஷை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெயப்பிரகாஷை அருகில் இருந்தவர்கள்  மீட்டு ஐசிஎப் ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஐசிஎப் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், திருவள்ளூரில் வசிக்கும் ஆரோக்கியசாமியின் உறவினர் அவருக்கு போன் செய்துள்ளார். அவர் எடுக்காததால், ஐசிஎப் ரயில்வே குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று காலை வந்து பார்த்துள்ளார். அப்போது, ஆரோக்கியசாமி சுயநினைவின்றி கிடந்தார். அவரை மீட்டு ஐசிஎப் ரயில்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஆரோக்கியசாமி இறந்த விட்டதாக கூறினார். போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரோக்கியசாமி, விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு காரணா என பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: