லண்டன் மாநாட்டில் ராகுல் கடும் தாக்கு மக்கள் குரலை அடக்கும் பாஜ

புதுடெல்லி: ‘நாட்டில் தனியார் துறை ஏகபோகத்தை ஊக்குவித்து, ஊடகங்களை கட்டுப்படுத்தி, மக்களின் குரல்களை அடக்குகிறது பாஜ அரசு,’ என ராகுல் காந்தி கடுமையாக தாக்கிப் பேசினார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ‘ஐடியாஸ் பார் இந்தியா’ மாநாடு நடந்தது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் ராகுல் காந்தி பேசியதாவது: ஒரே ஒரு தனியார் நிறுவனம், இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களையும், துறைமுகங்களையும், உள்கட்டமைப்புகளையும் கட்டுப்படுத்துவது மிகவும் ஆபத்தானது. இதற்கு முன் எந்த ஒரு ஆட்சியிலும் இந்த அளவுக்கு தனியார் துறை ஏகபோகம் இருந்ததில்லை. பாஜ நாடு முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு தேவை ஒரே ஒரு தீப்பொறி தான். அதன் பின் நாம் மிகப்பெரிய சிக்கலில் இருப்போம். மக்களின் குரல்களை பாஜ அடக்கி ஒடுக்குகிறது.

ஒரு பிரதமர் என்பவர், மற்றவரின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க வேண்டும். ஆனால், நம் பிரதமர் கேட்கவில்லை. சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை வாயில் போட்டுக் கொண்டு, பாகிஸ்தானைப் போல இந்திய அரசும் மென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் உலகத்துக்கு நல்லது. இந்த ஜனநாயகம் சிதைந்தால், அது உலகளவில் பிரச்னையை ஏற்படுத்தும். இவ்வாறு ராகுல் பேசினார். ராகுலின் இந்த பேச்சுக்கு பாஜ தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் வெறுப்பால், வெளிநாட்டில் இந்தியாவின் மதிப்பை அவர் குறைத்து விட்டதாக கூறி உள்ளனர்.

* திமுக.வை மதிக்கிறோம்

ராகுல் மேலும் பேசுகையில், ‘‘உதய்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனை அமர்வு கூட்டத்தில், நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் மாநில கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட விரும்புகிறோம். காங்கிரசை ‘பெரியண்ணனாக’ நான் பார்க்கவில்லை. அதாவது, திமுக.வை தமிழக மாநில கட்சியாக மதிக்கிறோம். மற்ற எதிர்க்கட்சிகளை விட காங்கிரஸ் எந்த வகையிலும் உயர்ந்ததல்ல, நாம் அனைவரும் ஒரே போரில் போராடுகிறோம்.  அதே சமயம் மாநில கட்சிகளை ஒரே கட்டமைப்பாக செயல்படுத்தக் கூடிய தேசிய சித்தாந்தத்தை காங்கிரஸ் கொண்டுள்ளது,’’ என்றார்.

* என் தந்தை மன்னிக்க கற்றுத் தந்திருக்கிறார்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 31வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘எனது தந்தை தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவரது கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைத்தன. அவர் கருணை மிக்க மனிதர். எனக்கும், பிரியங்காவுக்கும் மன்னிக்கவும், மற்றவர் உணர்வுகளைப் புரிந்து கொள்வதன் மதிப்பையும் கற்றுக்கொடுத்தவர். நாங்கள் ஒன்றாக செலவழித்த நேரங்களை அன்புடன் நினைவு கொள்கிறேன்,’ என கூறி உள்ளார்.

* கர்வமல்ல… நம்பிக்கை

‘ஐரோப்பாவின் சில உயர் அதிகாரிகளிடம் பேசிய போது, இந்திய வெளியுறவுத் துறை முற்றிலும் மாறிவிட்டது. எதையும் கேட்பதில்லை. அவர்கள் திமிராக நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினர்’ என லண்டனில் ராகுல் பேசினார். இது குறித்து டிவிட்டரில் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘ஆம், இந்திய வெளியுறவுத்துறை மாறிவிட்டது. அது அரசின் உத்தரவுகளை பின்பற்றுகிறது. விமர்சனங்களுக்கு பதிலடி தருகிறது. இதற்கு பெயர் கர்வமில்லை, நம்பிக்கை மற்றும் தேச நலனை பாதுகாத்தலாகும்,’ என கூறி உள்ளார்.

Related Stories: