கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்

பாரிஸ்: பிரபல கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன், பாரிஸ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஆஸி. ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் என ஆண்டு தோறும் 4 கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் வீரர், வீராங்கனைகளுக்கு சவாலான போட்டியாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் பாரிசில் இன்று தொடங்குகிறது. மகளிர் ஒற்றையர் பைனல் ஜூன் 4, ஆண்கள் ஒற்றையர் பைனல் ஜூன் 5ல் நடைபெறும்.

ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனும் உலகின் நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் (செர்பியா), மெத்வதேவ் (ரஷ்யா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), சிட்சிபாஸ் (கீரிஸ்), 13 முறை சாம்பியன் நடால், இளம் வீரர் அல்கராஸ் (ஸ்பெயின்), யானிக் சின்னர் (இத்தாலி) ஆகியோர் பட்டம் வெல்ல வரிந்துகட்டுகின்றனர். மகளிர் பிரிவில் நடப்பு ஒற்றையர், இரட்டையர் பிரிவு சாம்பியன்  பார்போரா கிரெஜ்சிகோவா (செக் குடியரசு), உலகின் நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), எம்மா (இங்கி.), படோசா (ஸ்பெயின்), மரியா சாக்கரி (கிரீஸ்), ஆன்ஸ் ஜெபர் (துனிசியா), பிளிஸ்கோவா (செக்.), சபலென்கா (பெலாரஸ்) ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், பிரெஞ்ச் ஓபனை நேரில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

* ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா பங்கேற்க உள்ளனர்.

* பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடர்ந்து ஒருவரே மீண்டும் மீண்டும் சாம்பியன் பட்டம் பெறுவது செரீனாவுடன் (2015) முடிந்து விட்டது. அதன் பிறகு 6 ஆண்டுகளாக முகுருசா (ஸ்பெயின்), ஆஸ்டபென்கோ (லாத்வியா), ஹாலெப் (ருமேனியா), ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா), ஸ்வியாடெக் (போலந்து), கிரெஜ்சிகோவா (செக்.) என அடுத்தடுத்து புதிய சாம்பியன்கள்தான் உருவாகி வருகின்றனர்.

* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2015க்கு பிறகு புதிய சாம்பியன் உருவாகவில்லை. அந்த ஆண்டு வாவ்ரிங்கா (சுவிஸ்) சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், ஜோகோவிச் (2016, 2021), நடால் (2017, 2018, 2019, 2020) ஆதிக்கமே கொடிகட்டிப் பறந்து வருகிறது. இம்முறை இளம் வீரர்கள் சாதிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

* கொரோனா தடுப்பூசி பிரச்னையால் ஆஸி. ஓபனில் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில், ஜோகாவிச் இங்கு களமிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா, பெலாரஸ் வீரர், வீராங்கனைகள் நாட்டின் பெயர், கொடி குறிப்பிடப்படாமல் பங்கேற்கின்றனர்.

Related Stories: