பட்டியலினப் பெண்ணின் உடலை புதைக்க இடமின்றி தவிப்பு: 3 நாட்களாக உறவினர்கள் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உயிரிழந்த பட்டியலினப் பெண்ணின் உடலை புதைக்க இடம் கிடைக்காததால் உறவினர்கள் 3 நாட்களாக போராடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு நிலையான மயானம் இல்லாமல் தவித்து வந்த நிலையில் துக்க நிகழ்வு ஏற்படும் போதெல்லாம் ஏரி, குளம், ஓடை போன்ற இடங்களிலேயே புதைத்தும் எரித்தும் வந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி கொட்டியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சத்தியநாராயணன் மனைவியான அமுதா என்ற பெண் இறந்துள்ளார். இறந்த அமுதாவின் உடலை புதைக்க மாற்றுச் சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால் இறந்த பெண்ணின் உடலை புதைக்க இடம் கிடைக்காததால் 3 நாட்களாக உறவினர்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து நிலையான இடுகாடு அமைத்து கொடுக்க வலியுறுத்தி பட்டியலின மக்கள் இறந்த அமுதா பெண்ணின் உடலை வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: