இரண்டு மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? மூடிய அறையில் பேசியும் முடிவெடுக்க முடியாமல் முடிந்தது அதிமுக கூட்டம்: தென் மாவட்டம், வட மாவட்டத்துக்கு தலா ஒன்று என முடிவு

சென்னை: தமிழகத்தில் 2 அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்று ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் நிர்வாகிகள் நேற்று 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். ஆனாலும், முடிவு எடுக்க முடியாமல் இழுபறி நிலையே நீடிக்கிறது. தமிழக எம்பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ம் தேதி நிறைவு பெறுகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24ம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போதைய எம்எல்ஏக்களின் அடிப்படையில் திமுகவுக்கு 4 எம்பி பதவியும், அதிமுகவுக்கு 2 எம்பி பதவியும் கிடைக்கும். இதில் அதிமுக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்று அக்கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஜெ.சி.டி.பிரபாகர், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் தற்போது எம்எல்ஏக்களாக இல்லை. அதனால், எம்பி பதவி கேட்டு கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். சி.வி.சண்முகம் தனக்கு அல்லது தனது சகோதரர் ராதாகிருஷ்ணனுக்கு வழங்க வேண்டும் என்று கூறி வருகிறார். செம்மலை தனக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படவில்லை. அப்போதே எடப்பாடி எனக்கு வாக்குறுதி அளித்தார். அதன்படி தனக்கு சீட் வழங்க வேண்டும் என்கிறார்.

அதேநேரம், தொடர்ந்து வட மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலங்களுக்கு அதிமுகவில் சமீப காலமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, தென் மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று தென் மாவட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இதனால், தற்போதுள்ள 2 மாநிலங்களவை எம்பி வேட்பாளர் பதவியை தென் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினருக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுப்பெற்று வருகிறது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எடப்பாடி, இரண்டு மாநிலங்களவை எம்பி பதவியும் தனது ஆதரவாளர்களுக்கே வழங்க வேண்டும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுக்ககே வழங்க வேண்டும் என்றும் கூறி வந்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக மூத்த நிர்வாகிகள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை 5.45 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி மற்றும் அதிமுக வழிகாட்டி குழு உறுப்பினர்கள், ஆட்சி மன்ற குழுவினர், முன்னாள் அமைச்சர்கள் என 21 பேர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டம் தொடங்கியதும், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எழுந்து தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார் என்றார். பன்னீர்செல்வம் எழுந்து, எம்ஜிஆர், ஜெயலலிதா காலம்போல தற்போது இல்லை. இதனால், முக்கிய நிர்வாகிகள் யாருக்கு சீட் வழங்கலாம் என்று தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்று கூறி அமர்ந்தார்.

உடனே, முன்னாள் எம்எல்ஏவும், வழிகாட்டு குழு உறுப்பினருமான ஜெ.சி.டி.பிரபாகர் எழுந்து, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அவர்கள் முடிவு எடுத்தனர். இப்போது கருத்து கேட்கிறீர்கள். இங்கு வந்துள்ள 21 பேரில் பெரும்பாலானவர்கள் சீட்டு கேட்டுள்ளோம். எங்களிடம் கருத்துக் கேட்டால், எப்படி நன்றாக இருக்கும். இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய 4 பேர் மட்டுமே தனியாக பேசி முடிவு எடுத்து அறிவியுங்கள். உங்களை மீறி நாங்கள் எந்த நடவடிக்கையிலும் இறங்க மாட்டோம். உங்கள் முடிவை கட்சி ஏற்கத் தயார். உங்களை தலைவர்களாக நாங்கள் ஏற்றுக் ெகாண்டுள்ளோம். உங்கள் முடிவே இறுதியானது என்று கூறினார்.

இதை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், பென்ஜமின், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பேசும் திட்டத்துடன் வந்திருந்தனர். ஜெ.சி.டி.பிரபாகர் சொன்னதும் அனைவரும் அமைதியாகிவிட்டனர். அப்போது தளவாய் சுந்தரம் மட்டும் எழுந்து, தென் மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், இந்த முறை தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் வளர்மதியோ, திமுகவில் வக்கீல்கள், படித்தவர்கள், பேசக்கூடியவர்களாக பார்த்து வழங்கியுள்ளனர். அதனால் அதிமுகவிலும் வக்கீல்களுக்கு வழங்க வேண்டும் என்றார். மற்றவர்கள் யாரும் பேசவில்லை. கூட்டம் 15 நிமிடம் மட்டுமே நடந்தது.

இதனால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பூட்டிய அறையில் தனியாக பேசினர். பின்னர் 45 நிமிடத்துக்குப் பிறகு அவர்கள் வெளியில் வந்தனர். சில முடிவுகளை எடுத்துள்ளோம். விரைவில் மீண்டும் பேசுவோம் என்று கூறிவிட்டு கூட்டத்தை முடித்தனர். இதனால் 4 பேர் நடத்திய கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்றார். அப்போது, எடப்பாடி பழனிசாமி, இந்த முறை கவுண்டர்களுக்கும், முக்குலத்தோருக்கும் வழங்க வேண்டாம்.

மற்றவர்களுக்கு வழங்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. பின்னர் கடைசியாக தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வழங்குவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் யாருக்கு வழங்குவது என்பது குறித்து முடிவு எடுக்கவில்லை. மீண்டும் 4 பேர் மட்டும் கூடி முடிவு செய்யலாம் என்று கூறி கூட்டத்தை முடித்துள்ளனர். தற்போதுதான் வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது. இதனால் 10 நாட்களுக்கும் மேல் உள்ளதால் மீண்டும் பேசி முடிவு செய்யலாம் என்று கூறிவிட்டு நிர்வாகிகள் கலைந்து சென்றது தெரியவந்துள்ளது.

Related Stories: