திருஞானசம்பந்தர் குருபூஜை தஞ்சையில் விடிய விடிய முத்துப்பல்லக்கு வீதியுலா

தஞ்சை: தஞ்சையில் திருஞான சம்பந்தரின் குருபூஜையையொட்டி  ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பல்லக்கு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 107ம் ஆண்டாக இந்தாண்டு முத்து பல்லக்கு திருவிழா நேற்றிரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. இந்த விழாவையொட்டி தஞ்சையில் உள்ள கோயில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகிய சுவாமிகள் 9 முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 வீதிகளிலும் உலா வந்தனர். தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் இருந்து விநாயகர், முருகன், தஞ்சை மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோயிலில் இருந்து விநாயகர், முருகப்பெருமான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேலஅலங்கம் சுப்பிரமணிய சாமி கோயிலில் உள்ள முருகர் உள்ளிட்ட கோயில்களில் இருந்து சுவாமிகள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி தஞ்சையில் உள்ள 4 ராஜ வீதிகளிலும்  உலா வந்தனர்.

இதேபோல் தெற்கு வீதியில் உள்ள கமலரத்ன விநாயகர் கோயிலில் இருந்து விநாயகர், கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் விநாயகர் கோயில், மாமாசாகிப் மூலையில் உள்ள சித்தி விநாயகர் கோயில், வடக்கு வாசலில் உள்ள விநாயகர் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் இருந்து விநாயகரும், முருகப்பெருமானும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இந்த பல்லக்குகள் எல்லாம் அந்தந்த கோயில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சை தெற்கு வீதி, கீழவீதி, மேலவீதி, வடக்கு வீதிகளில் வலம் வந்தது. வீதி உலா முடிவடைந்ததும் சுவாமிகள் அந்தந்த கோயில்களுக்கு சென்றடைந்தன.   இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: