விக்கெட் இழப்பின்றி 210 ரன் கே.எல்.ராகுல் - டி காக் புதிய சாதனை

மும்பை:  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் - டி காக் ஜோடி 20 ஓவர்களும் விளையாடி 210 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக ஜானி பேர்ஸ்டோவ்-டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி) ஜோடி 185 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

தற்போது அந்த சாதனையை ராகுல் - டி காக் ஜோடி முறியடித்துள்ளது. இதன் மூலம் இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப்-க்கு அதிக ரன்கள் குவித்த ஜோடிகள் பட்டியலில் ராகுல் - டி காக் ஜோடி முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் எடுத்ததன்  மூலம் டி காக், ஐபிஎல் வரலாற்றில் 3-வது அதிகபட்ச ரன்களை குவித்த வீரர்  என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோர் 2வது விக்கெட்டுக்காக 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் ரன் குவிப்பில் கிறிஸ் கெய்ல் 175 ரன்களுடன் முதலிடத்திலும், பிரண்டன் மெக்கல்லம் 158 ரன்களுடன் 2 வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: