பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு வெள்ளைத்துணியால் வாயை கட்டி காங்கிரசார் இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்ச நீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்ச நீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை.  அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைக்காரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம். நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு, வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: