அமைந்தகரையில் பயங்கரம் பைனான்சியர் வெட்டிக்கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்

சென்னை: சென்னை அமைந்தகரையில் பட்டப்பகலில் பைனான்சியர் ஒருவரை ஆறு பேர் கொண்ட  கும்பல் வெட்டி கொலை செய்தது. அதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். சென்னை சேத்துப்பட்டு, வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (36), பைனான்சியர். இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 2:30 மணி அளவில் அண்ணாநகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு ஆறுமுகம் அவரது நண்பர்  ரமேஷுடன் பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை அடுத்த செனாய் நகர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பைக்கில்  அவரை பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆறுமுகத்தை வழிமறித்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்ட முயன்றனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பித்து மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் ஓடினார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ், தப்பி ஓட்டம் பிடித்தார். இருப்பினும் மர்ம கும்பல் ஆறுமுகத்தை விடாமல் பட்டப்பகலில் நடுரோட்டில் விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் சாலையில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். அந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். எனினும் அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய ஆறுமுகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆறுமுகம் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

தகவலறிந்து அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கொலையாளிகள் யார். கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.  அமைந்தகரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் பைனான்சியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைனான்சியர் ஆறு முகம் மீது கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: