ராயக்கோட்டை அருகே தக்காளி தோட்டத்தை சேதப்படுத்திய மானை கட்டிப்போட்ட விவசாயிகள்: மீட்க வந்த வனத்துறையினரிடம் வாக்குவாதம்

ராயக்கோட்டை: ராயக்கோட்டை திம்ஜேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட அடக்கம கிராமத்தில் தக்காளி, அவரை போன்ற விவசாய விளை பொருட்களை, விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இக்கிராமம் காட்டுப்பகுதியை ஒட்டி இருப்பதால், யானை, மான், காட்டுப் பன்றிகளால் பயிர்கள் அதிகம் சேதம் ஏற்பட்டு வருகிறது.  இந்நிலையில் நேற்று அடக்கம் கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள், கொம்பு மான்கள் தக்காளி தோட்டங்களிலுள்ள தக்காளிகளை தின்றுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள், மான்களை துரத்திச்சென்றனர். அப்போது நாய் புள்ளி மானை விரட்டிச்சென்று கடித்ததால் காயமடைந்து கீழே விழுந்தது. இதையடுத்து காயமடைந்த மானை மீட்டு, கட்டி வைத்துவிட்டு, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானை பிடித்துச் செல்ல முயன்றனர். அப்போது விவசாயிகள் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊராட்சித்தலைவர் ஈஸ்வரி முத்தன், மல்லேசன் ஆகியோரும் வனத்துறையினரிடம் வலியுறுத்தினர். உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் கூறியதையடுத்து சமாதானம் அடைந்தனர். இதையடுத்து மானை வனத்துறையினர் பிடித்துச் சென்றனர்.

Related Stories: