வரும் 21ம் தேதி குரூப் 2, 2ஏ முதல் நிலை தேர்வு, 5,529 பணியிடங்களுக்கு 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர் : டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு

*  9 மணிக்கு பிறகு வருபவர்களுக்கு அனுமதி இல்லை

சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ பதவியில் காலியாக உள்ள 5,529 காலி பணியிடத்துக்கு வருகிற 21ம் தேதி முதல் நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்.  9 மணிக்கு பிறகு தேர்வு எழுத வருபவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, 2ஏ பணிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி  23ம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பதவி(நேர்முக தேர்வு பதவி) 116 பணியிடம். குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 காலி பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வு எழுத ஏதாவது இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்தேர்வுக்கு இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர். மொத்தம் 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்தனர். இவ்வளவு பேர் விண்ணப்பித்தது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது.

இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வு வருகிற 21ம் தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 4,012 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேர்வை நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்வை சிறப்பாக நடத்த வேண்டும். தேர்வு கூடங்களுக்கு மாணவர்கள் சிரமமின்றி சென்று வர போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். தேர்வு அமைதியாக நடைபெற தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்போது அவர் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:

குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு வருகிற 21ம் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். பொது தமிழில் 100 வினாக்கள், பொது அறிவில் 75 வினாக்கள்(டிகிரி தரத்திலும்), திறனறிவில் 25 வினாக்கள்(எஸ்எஸ்எல்சி) என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு தொடங்கும் நேரத்தில் இருந்து 1 மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு கூடங்களுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9 மணிக்கு பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவர்கள் சிரமமின்றி தேர்வு கூடங்களுக்கு வர அனைத்து வகையான ஏற்பாடுகளையும் டிஎன்பிஎஸ்சி செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: