சாத்தூரில் பராமரிப்பின்றி உள்ளது ஆங்கிலேயர் கட்டிய பாலம் பாதுகாக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சாத்தூர் : சாத்தூரில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சாத்தூர் வைப்பாற்று பகுதியை கடப்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வைப்பாற்றின் குறுக்கே பாலம் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி 1863ம் ஆண்டு பாலம் அமைக்கும் பணியை துவங்கப்பட்டது. பழங்கால முறையில் கட்டிட பணி மேற்கொண்டு 1867ம் ஆண்டு பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.

14அடி அகலமும் 840 அடி நீளமும் கொண்ட இந்த பாலம் ஆங்கிலேயர்களின் குதிரை வண்டிகள் மட்டும் செல்வதற்காவே கட்டப்பட்டது. வருடங்கள் கடந்த பின்னர் இந்த பாலம் கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட பலதரப்பட்ட வாகனங்களும் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. குதிரை வண்டி மட்டுமே செல்லும் அளவில் 14 அடி அகலத்தில் அமைக்கப்பட்ட பாலம் போக்குவரத்து அதிகம் நிறைந்த இத்தருணத்தில் பாலத்தில் எதிரும் புதிருமாக வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 156 ஆண்டுகளை கடந்தாலும் பாலம் கம்பீரமாகவும் உறுதியாகவும் இருந்து வந்ததாக நெடுஞ்சாலைதுறையினர் கூறுகின்றனர்.

சாத்தூர் பிரதான சாலையில் உள்ள இந்த பாலம் கோவில்பட்டியை கடந்து கன்னியகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான வழியாக இருந்தது. சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு அதிக பக்தர்கள் வரும் நாட்களில் இந்த பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அந்த சமயங்களில் எதிரும் புதிருமாக இருபக்கமும் வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது.

இதனால் பொதுமக்களின் கால நேரமும் விரயம் ஆனது. இதனால் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நிதி ஒதுக்கீடு செய்து ஒரே நேரத்தில் இரண்டு வாகனம் செல்லும் அளவிற்கு புதிய பாலம் அமைக்கப்பட்டது. தற்போது பாலத்தில் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

ஆனால் வரலாற்று சிறப்பு மிகுந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தை நெடுஞ்சாலைதுறையினர் கண்டுகொள்ளாமல் விட்டதால் தற்போது சமூக விரோதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. மேலும் பாலம் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பாலத்தில் விளக்குகள், சாலையை சீா் செய்ய வேண்டும். இதன் மூலம் பாலத்தை கடந்து அமீர்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். பொதுமக்களின் நடைபயிற்சிக்கு பயன்படுத்தி கொள்ளலாம். எனவே வரலாற்று சிறப்பு மிக்க பாலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: