பாரம்பரிய கட்டிடங்கள் உள்ள வளாகத்தில் புதிய கட்டிட பணி மேற்கொள்ளும்போது தகவல் பலகை வைக்க வேண்டும்: சிஎம்டிஏவுக்கு மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை:  ராஜா அண்ணாமலைபுரத்தில் ராஜா முத்தையா உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகள், பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கட்டுமானம் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், அதற்கு பொது தகவல் அதிகாரி உரிய பதில் தரவில்லை. இதையடுத்து, மாநில தகவல் ஆணையத்தில், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் முருகேஷ், விஷ்கியா, கணேஷ், பிரசாந்த் ஆகிய நான்கு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த தகவல் ஆணையர் அளித்த உத்தரவு வருமாறு: செட்டிநாட்டு இல்லம், ஒரு தனி மனிதனின் கடின உழைப்பின் அடையாளமாகவும், பல பெரிய மனிதர்களும் வாழ்ந்துள்ளனர். அத்தகைய பாரம்பரிய கட்டிடம் மற்றும் நுழைவு வளைவு பாதுகாக்கப்பட வேண்டும். இந்த செட்டிநாட்டு இல்லத்தில்  உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம், வித்யாலயா ஆகிய பள்ளியில், தற்போது 7 ஆயிரத்து 908 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளி வளாகத்தில் 13 மாடி கட்டிடம் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ. அனுமதி அளித்துள்ளது.

எனவே, பாரம்பரிய கட்டிடமான செட்டிநாடு அரண்மனை வளாகத்தில் 13 மாடி கட்டடம் கட்டுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்தும், இந்த கட்டடத்தை பாதுகாப்பது குறித்தும், தலைமை செயலாளர், சட்டசபை செயலாளர் ஆகியோருக்கு சி.எம்.டி.ஏ., தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த தகவலையும் சிஎம்டிஏ தரவில்லை. அதுமட்டுமல்லாமல் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க, தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட கமிட்டி, ராஜா அண்ணாமலை செட்டியார் குடும்பத்தின் வாரிசுகளுக்கும், சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் கட்டுமான பணிகள் குறித்தும் அதற்காக வழங்கப்பட்ட அனுமதி குறித்தும் விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை கட்டுமானம் நடைபெறும் பகுதியில் வைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. தகவல் பலகை வைத்தால் மாணவர்களும், பெற்றோர்களும் கட்டுமானம் குறித்து தெரிந்துகொள்ள முடியும். இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றாததால் ஒரு மாணவருக்கு ரூ.1000 வீதம் இங்கு படித்து வரும் 7 ஆயிரத்து 908 மாணவர்களுக்கு ரூ.79 லட்சத்து 8 ஆயிரம் ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பது குறித்து சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த வளாகத்தில் கட்டப்படும் 13 மாடி கட்டடத்தில் 13 ஆயிரம் டன் ஏ.சி. பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இதன்மூலம் வெளியேறும் அதிகப்படியான வெப்பக்காற்று பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். கட்டுமான பணிகளால் ஏற்படும் சத்தம் மாணவர்களின் படிப்புக்கு இடையூறு ஏற்படுத்திவிடும். தூசு போன்ற சுற்றுச்சூழல் பிரச்னையும் மாணவர்களை பாதிக்கும். எனவே, கட்டுமானம் குறித்த தகவலை முதல்வர் பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் இதே பள்ளியில் படிப்பை தொடர வேண்டுமா அல்லது வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டுமா என்பதை முடிவு செய்ய வாய்ப்பு ஏற்படும் என்று உத்தரவிட்டு விசாரணை ஜூன் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: