தலைவர் கலைஞரோடு இணைபிரியாமல் சண்முகநாதன் இருந்ததுபோல திமுக ஆட்சிக்கு நீங்கள் பக்கபலமாக இருந்து துணை நிற்க வேண்டும்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சண்முகநாதன்தான், எப்படித் தலைவரோடு இணைபிரியாமல், கடைசி வரையில் அந்த குடும்பத்தோடு வாழ்ந்து காட்டியிருக்கிறார். அதேபோல இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கக் கூடிய, நம்முடைய திமுக ஆட்சிக்கு நீங்கள் பக்கபலமாக இருந்து துணைநிற்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற கலைஞரின் செயலாளர், மறைந்த சண்முகநாதனின் பேரன் டாக்டர் ஆர்.அர்விந்த்ராஜ்-வி.பிரியதர்ஷினி ஆகியோரது திருமணம் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: தலைவர் கலைஞர் மறைகிற வரையில், தலைவரோடு ஒன்றிப் பிணைந்து இருந்தவர் சண்முகநாதன். நாங்கள் எல்லாம் கூட அப்பா என்ற முறையில் தலைவர் கலைஞரிடம் அதிகம் பேசியது கிடையாது. ஆனால் சண்முகநாதன்தான் அதிகம் பேசியிருக்கிறார். நிறைய திட்டு வாங்குவார். திட்டு வாங்கிவிட்டு, கோபித்துக்கொண்டு இரண்டு நாள் வரமாட்டார். அதற்குப் பிறகு தானாக வந்துவிடுவார். இப்படிப் பல ஊடல்கள் தலைவருக்கும்அவருக்கும் அடிக்கடி நடந்திருக்கிறது.   

கலைஞருடைய எழுத்துகளை, உணர்வுகளை அப்படியே டைப் செய்து இன்றைக்கு “கலைஞர் கடிதங்கள், நெஞ்சுக்கு நீதி” புத்தகங்கள் எல்லாம் நாடு முழுவதும் பரவியிருக்கிறதென்றால், கலைஞர் எழுதினார், கலைஞர் சில நேரங்களில் எழுத முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டபோது, அதை வார்த்தைகளால் சொல்லுவார். அதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு அதை அப்படியே அச்சு பிசகாமல், தலைவர் எந்த உணர்வோடு எழுதியிருப்பாரோ, அதை அப்படியே டைப் செய்து இன்றைக்கு அந்தப் புத்தகங்கள் எல்லாம் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த நேரத்தில் உங்களைக் கேட்டுக்கொள்வது, எப்படித் தலைவரோடு இணைபிரியாமல், கடைசி வரையில் அந்தக் குடும்பத்தோடு வாழ்ந்து காட்டியிருக்கிறாரோ, அதே போல நாமும் நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில், இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கக் கூடிய, நம்முடைய திமுக ஆட்சிக்கு நீங்கள் பக்கபலமாக இருந்து துணைநிற்க வேண்டும் என்றார்.

Related Stories: