மூடி மறைக்கும் தந்திரம் எடுபடவில்லை வட கொரியாவில் கொரோனா அலை: 2 வாரத்தில் 5 லட்சம் பேர் பாதிப்பு

சியோல்: வட கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு கடந்த 2 வாரங்களில் 5 லட்சத்துக்கு அதிகமானோர் பாதித்துள்ளனர். 21 பேர் பலியாகி உள்ளனர்.சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் தாக்கியது. ஆனால், அடக்குமுறைக்கு பெயர் போன வடகொரியா, தனது நாட்டில் கொரோனாவே இல்லை என்று கடந்த 2 ஆண்டுகளாக மார்தட்டி வந்தது. சில தினங்களுக்கு முன் இந்நாட்டில் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானதும், நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தினார் அதிபர் கிம் ஜோங் உன். ஆனால், அங்கு நிலைமை இப்போது கைமீறி போய் இருக்கிறது என்பது உறுதியாகி இருக்கிறது. இந்நாட்டில் கடந்த மாதம் இறுதியிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாகி வந்துள்ளது. கடந்த 20 நாட்களில் இந்நாட்டில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். அது பற்றிய செய்திகள் மூடி மறைக்கப்பட்டு உள்ளது.

இந்நாட்டில் நேற்று முன்தினம்  ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 440 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதில்,  ஒரே நாளில் 21 பேர் பலியாயினர்.  இதனால்,  பலியானோர் மொத்த எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 24 ஆயிரத்து 440  பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும். 10 ஆயிரம் பேர்  தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து வந்த பொருட்களின் மூலம் இந்நாட்டில் கொரோனா அலை ஏற்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் இந்நாட்டில் நடந்த பிரமாண்ட ராணுவ அணிவகுப்பின் மூலமாக இது அதிகமாகி இருக்கிறது. இதை கட்டுப்படுத்துவது குறித்து ஜோங் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் பொலீட்பீரோ கூட்டத்தில் பேசிய அவர், ‘கொரோனா வைரஸ் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். இதை ஒழிக்க  மக்களுக்கும் அரசுக்கும்  இடையே ஒத்துழைப்பு ஏற்பட வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: