குளு குளு குற்றாலத்தில் அனல் பறக்கும் அரசியல்!: குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மே 25-ல் நடைபெறும் அறிவிப்பு..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மே 25-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமான குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் 8 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தலில் திமுக-வும் அதிமுக-வும் நேரடியாக மோதின. தேர்தலில் திமுக-வுக்கு 4 வார்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட அதிமுக-வுக்கு 4 வார்டுகளும் கிடைத்தன. திமுக, அதிமுக தலா 4 இடங்களை பெற்று சமநிலையில் இருந்ததால் தலைவர் பதவிக்கு யாரும் தேர்வு செய்ய முடியாதபடி இழுபறி நிலை நீடித்து வருகிறது. தொடர்ந்து தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திமுக கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 2 முறை நடத்தப்பட்ட தலைவர் தேர்வுக்கான கூட்டத்தில் போதிய கோரம் இல்லாததால் கடந்த மார்ச் 26ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 3வது முறையாக வரும் 25ம் தேதி தலைவருக்கான தேர்தல் நடக்கும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் அறிவித்துள்ளார். தேர்தலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மையமான குற்றாலத்தில் வாகன பார்க்கிங், லாட்ஜுகள், வணிக மையங்கள் அதிகம் இருப்பதால் பணம் புரளும் பேரூராட்சியாக உள்ளது. அதனால் இந்தப் பேரூராட்சித் தலைவர் பொறுப்புக்குக் கடுமையான போட்டி நிலவுகிறது.

Related Stories: