வாணியம்பாடியிலிருந்து ஆந்திராவுக்கு வேனில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-2 பேர் அதிரடி கைது

திருப்பத்தூர் : வாணியம்பாடியிலிருந்து ஆந்திராவுக்கு வேனில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எஸ்பி பாலகிருஷ்ணனுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தமிழக-ஆந்திர எல்லையான கொத்தூர், வெலதிகாமணிபெண்டா, மாதகடப்பா மலை பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 12.30 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் கோடியூரில் பிரபு என்பவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து, போலீசார் அங்கு சென்றபோது வேனில் 2 பேர் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்ததை கண்டனர்.

வேனை சோதனையிட்டபோது 57 மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில், ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(35), சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்த வேலு(38) ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். வேனுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள வீட்டின் உரிமையாளர் பிரபுவை தேடி வருகின்றனர்.

Related Stories: