கீழபூலாங்கால் கோயில் சித்திரை திருவிழா ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம்

திருச்சுழி : திருச்சுழி அருகே பரளச்சி அடுத்த கீழப்பூலாங்கால் கிராமத்தில் வீரசக்கதேவி கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகளுக்கான போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன. இந்த மாட்டு வண்டி பந்தயமானது கீழபூலாங்காலில் இருந்து துவங்கி கீழக்குடி வழியாக துத்திநத்தம் வரை சுமார் 10 கிலோமீட்டர்தொலைவிற்கு நடைபெற்றது.

இதில் 6 பெரிய மாட்டு வண்டிகளும், 13 சிறிய மாட்டுவண்டிகளும் கலந்து கொண்டன.இப்போட்டியில் கலந்து கொள்ள மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகளும், அதன் சாரதிகளும் கலந்து கொண்டனர்.பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு ரூ. 25 ஆயிரம், 2ம் பரிசு ரூ.23 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.21 ஆயிரம் என பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று பந்தயத்தை கண்டு களித்ததுடன், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.

Related Stories: