நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் 15 தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்-அதிகாரிகள் திடீர் சோதனை

நாமக்கல் : நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் அதிகாரிகள் அளவீட்டு கருவி மூலம் திடீர் சோதனை நடத்தி, 15 பஸ்களில் இருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை அகற்றினர்.

நாமக்கல் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள பயன்படுத்தப்படுகிறது. சாலைகளில் பஸ்கள் செல்லும்போது, அதிக ஒலி எழுப்புவதால் பாதசாரிகள் மற்றும், பைக், கார்களில் செல்பவர்கள் அதிர்ச்சி அடைந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தடுக்க நேற்று, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் இணைந்து பஸ்களை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி இயக்குனர் மோகனாம்பிகை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமாமகேஸ்வரி, சரவணன் ஆகியோர் ஈடுபட்டனர். பஸ்களில் இருந்த ஏர்ஹாரன்கள் அளவீட்டு கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது 102 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் வகையில் வைக்கப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப்பட்டது.

15 பஸ்களில் இருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டு, அந்த பஸ் உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது போக்குவரத்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் கூறுகையில், ‘ஆய்வு செய்யப்பட்ட சில பஸ்களில் 112 டெசிபல் வரை ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் இருந்தது. அவை அகற்றப்பட்டுள்ளது. அந்த பஸ்களுக்கு கலெக்டர் அபராதம் விதிப்பார். அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தகூடாது என அனைத்து பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,’ என்றார்.

Related Stories: