சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் பற்றி எரிந்த கார்: உடனடியாக நிறுத்தப்பட்டதால் உயிர்சேதம் தவிர்ப்பு

சென்னை: சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பல்லாவரத்தில் இருந்து 4 பேர் கொண்ட நபர்கள் திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு, தாம்பரத்தை நோக்கி டாடா இண்டிகா காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை வழியே வந்து கொண்டிருந்த பொழுது, காரின் பின்புறம் புகை கிளம்பியுள்ளது. இதனை கண்ட ஓட்டுநர் காரை சாலையின் இடதுபுற ஓரமாக நிறுத்தி உள்ளார். பின்னர், காரில் இருந்த 4 பேரும் உடனடியாக காரை விட்டு வெளியேறி உள்ளனர். காரின் பின்புறம் ஏற்பட்ட தீ, சிறிது நேரத்தில் மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது.

இதனையடுத்து தாம்பரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். ஆனால், காரில் முன்பகுதியை தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் முழுமையாக எரிந்து நாசமானது.  இதனையடுத்து அங்குள்ள காவல்துறையினர், அந்த காரின் ஓட்டுநர் யார்? காருக்கு உரிய அனுமதி உள்ளதா? என அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அது மிகவும் பழமையான கார் என்றும், அந்த கார் ஓட்டுவதற்கு போதிய அனுமதி இல்லாதது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories: