திருப்பதி அருகே ₹7 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டை பறிமுதல்-ஆந்திரா, திருப்பத்தூரை சேர்ந்த 11 பேர் கைது

திருமலை : திருப்பதி அருகே ₹7 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.

திருப்பதி மாவட்ட எஸ்பி பரமேஸ்வருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புத்தூர் டிஎஸ்பி யஷ்வந்த் மற்றும்   சத்தியவேடு இன்ஸ்பெக்டர் சிவகுமார், வடமாலைபேட்டா, பிச்சாட்டூர், கே.வி.பி.புரம், நாகலாபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரய்யா, காந்த், நாகார்ஜுனா, பிரதாப் மற்றும் போலீசார் திருப்பதி- நகரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த காரும், பின்னால் வந்த மினி சரக்கு வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 191 செம்மர கட்டைகள் மற்றும் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட 8   பைகளில் கடத்தப்பட்ட சுமார் ₹4 கோடி மதிப்புள்ள 3 டன் செம்மரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், புதுக்கோட்டை மாவட்டம், விராச்சேலி கிராமத்தை சேர்ந்த செந்தில் குமார்(42), மேலவாயில் கிராமத்தை சேர்ந்த முத்துராமன்(50), சென்னை எண்ணூரை சேர்ந்த நாகராஜு(44), நசீர்பாஷா(54), ரெட்டிஹீல்ஸ்சை சேர்ந்த சாரங்கபாணி(64) என்பது தெரிந்தது. பின்னர், அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து கார் மற்றும் வேனுடன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட  செந்தில் குமார் பெரும் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்து கொண்டு சென்னை, பெங்களூரு வழியாக வெளிநாடுகளுக்கு செம்மரக்கட்டைகளை ஏற்றுமதி செய்து  போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், போலீசார் கைது செய்து செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்ததாக எஸ்பி பரமேஸ்வர் தெரிவித்தார்.

அதேபோல், திருப்பதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் மூன்று வெவ்வேறு இடங்களில் ரோந்து சென்று 127 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

அதில் கும்மிடிப்புடியைச் சேர்ந்த கரிமுல்லா(55), சையத்(36), திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வேசம்(33), மது(34), ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கரணி மிட்டா கிராமத்தை சேர்ந்த நானிமேலா ரவிக்குமார்(25), நானிமேலா சிரஞ்சீவி(22) ஆகிய 6 பேரை கைது செய்து 2 கார்கள் மற்றும் 3 பைக்குகள் மற்றும் ₹3 கோடி மதிப்புள்ள 127 செம்மரக்கட்டைகளை  பறிமுதல் செய்ததாக அதிரடிப்படை எஸ்பி சுந்தரராவ் தெரிவித்தார்.

Related Stories: