தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் 10ம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘21.06.2022 முதல் 1.08.2022 வரை நாட்டில் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இத்தேர்தலில் போட்டியிட வரும் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 31ம் தேதி. தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்பப் பெற ஜூன் 3ம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும்.

அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன், நவநீத கிருஷ்ணன், ஆர்.எஸ்.பாரதி, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார், கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் ஆகியோரின் பதவிக் காலம் முடிகிறது. ஆந்திராவில் 4 உறுப்பினர்களும், தெலங்கானா 2 , சட்டீஸ்கர் 2, மத்தியப் பிரதேசம் 3 , கர்நாடகா 4,  ஒடிசா 3, மகாராஷ்டிரா 6, பஞ்சாப் 2, ராஜஸ்தான் 4, உத்தர பிரதேசம் 11, உத்தரகண்ட் 1, பீகார் 5, ஜார்கண்ட் 2, அரியானா 2 என மொத்த 15 மாநிலகங்களில் 57 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

Related Stories: