புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் கேத்தி மலை ரயில் நிலையம்: சுற்றுலா பயணிகளை கவர்கிறது

ஊட்டி: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. 1854ம் ஆண்டு ஊட்டி மலையில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. ஆனால், மலைப்பகுதி என்பதாலும், ராட்சத பாறைகள் என மிகவும் கரடுமுரடாக இருந்ததாலும் இந்தப் பணி தாமதடைந்து, 1891ம் ஆண்டு தான் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. துவக்கத்தில் அதாவது 1899ம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதன்பின், 1908ம் ஆண்டு ஊட்டி வரை இந்த ரயில் பாதை நீட்டிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மலை ரயில் போக்குவரத்து தொய்வின்றி இயங்கி வருகிறது. பழமையான இந்த நீலகிரி மலை ரயிலுக்கு கடந்த 2005ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய அந்தஸ்த்தை வழங்கியது. இயற்கை சூழலுடன் வனங்களுக்கு நடுவே செல்லும் மலைரயிலில் பயணிக்க ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், சீசன் சமயங்களில் வரும் சுற்றுலா பயணிகள் பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணித்து மகிழ்கின்றனர்.

யுனெஸ்கோவின் பாரம்பர்ய அந்தஸ்துடன் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் ஊட்டி - குன்னூர் - மேட்டுப்பாளையம் வரையிலான நீலகிரி மலை ரயில் பாதையில் லவ்டேல், வெலிங்டன், குன்னூர், ஹில்குரோவ், ரன்னிமேடு போன்ற பல ரயில் நிலையங்கள் இருந்தாலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2092 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் கேத்தி மலை ரயில் நிலையம் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது. 1908 ஆண்டு ஆண்டு திறக்கப்பட்ட இந்த ரயில் நிலையத்தில் ஏகப்பட்ட சினிமா படிப்பிடிப்புகள் நடந்திருந்தாலும், கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில் 1982ம் ஆண்டு வெளிவந்த மூன்றாம் பிறை திரைப்படத்திற்குப் பின் மூன்றாம் பிறை ரயில் நிலையம் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துச் செல்லும் இந்த மலை ரயில் நிலைத்தை பழமை மாறாமல் புதுப்பொலிவுப்படுத்தியிருக்கிறது ரயில்வே நிர்வாகம்‌. இந்த ரயில் நிலையத்தில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இளைப்பாற நிழற்குடைகள், கைகளை சுத்தம் செய்துகொள்வதற்கான வசதி, இருக்கைகள், கழிப்பிடங்கள் உள்ள அனைத்தையும் புதுப்பித்துள்ளன. புதுப்பிக்கப்பட்ட மலை ரயில் நிலையத்தை பார்வையிடவே சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வதுடன், சினிமாவிற்கும் இந்த ரயில் நிலையத்திற்கும் உள்ள தொடர்பை நினைவு கூர்ந்து செல்கின்றனர்.

Related Stories: