நீடாமங்கலம் அருகே கோரையாறு தென்கரையில் கப்பிகள் பெயர்ந்த சாலை 10 ஆண்டுகால அவலநிலை: சீரமைக்காவிட்டால் மறியல் நடத்த முடிவு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் கண்ணம்பாடியிலிருந்து- தண்டாலம் பாலம் வரை சுமார் 4 கி மீட்டர் தூரத்திற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் கோரையாறு தென்கரை பாலம் வரை கப்பிகள் பெயர்ந்து மோசமான சாலையாக உள்ளது. இந்த முக்கிய சாலை வழியாக காரிச்சாங்குடி, மடப்புரம், சமுதாயகரை, மேலாளவந்தச்சேரி, கீழாளவந்தச்சேரி உள்ளிட்ட பல கிராம மக்கள் இந்த சாலை வழியாக வந்துதான் மன்னார்குடி, நீடாமங்கலம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல நகரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தாலுக்கா அலுவலகம், பத்திரப்பதிவு, வங்கிகளுக்கும், வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்கும் இங்கு வந்துதான் செல்ல வேண்டி உள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மூன்று முறை சாலை மறியல் அறிவித்து நீடாமங்கலம் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி உடனே சாலை அமைக்கப்படும் என ஒன்றிய அதிகாரிகள் கையொப்பமிட்டு கொடுத்த பின்னரும் அந்தப்பணி இன்னும் தொடராமல் உள்ளது. கடந்த ஆண்டும் அப்பகுதி மக்கள் சாலைமறியல் அறிவித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடனே சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை பொதுமக்கள், விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு சமாதான பேச்சுவார்த்தை நடந்து மீண்டும் ஓராண்டு ஆகிறது. சாலை அமைப்பதற்கான பணியை அதிகாரிகள் உடனே தொடங்க வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய சாலை மறியல் செய்யப்படும் என்றனர்.

சூரியன் மறையும் முன் ஊர் திரும்பிவிட வேண்டும்

சூரியன் மறைவதற்குள் வெளியூர் சென்று திரும்பி விட வேண்டும். தாமதமாக வந்தால் சாலையில் மின் விளக்கு வசதி இல்லாததால் கப்பிகள் (கருங்கல்) காலில் குத்தி ரத்தக்காயத்தை ஏற்படுத்தி மருத்துவமனைக்கு செல்ல நேரிடும். மேலும் இரு சக்கர வாகனங்களில் இரவில் வரும்போது பல வண்டிகள் பஞ்சராகி விடும். மேலும் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் வரமுடிவதில்லை. சாலைமிகவும் மோசமாக உள்ளதால் இந்த ஊர்களுக்கு பெண் பார்ப்பதற்கு கூட வர மறுப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: