செவிலியர் பள்ளிகளை அதிக அளவில் தொடங்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுமையும் இருக்கின்ற செவிலியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முதியோருக்கு உதவிட, லட்சக்கணக்கான செவிலியர்கள் தேவைப்படுகின்றார்கள். நாள்தோறும் வீட்டுக்கு வந்து போக வேண்டும் என்கின்ற அளவிற்கு, செவிலியர்களுக்கான தேவை பெருகி இருக்கின்றது. கேரளத்தின் இளம்பெண்களும், ஆண்களும் பெருமளவில் செவிலியர் பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். வளைகுடா நாடுகளில் உள்ள மருத்துவமனைகளிலும், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் பெரும் எண்ணிக்கையில் பணி ஆற்றுகின்றார்கள்.

அதுபோல, தமிழகத்தின் செவிலியர்கள் உலகம் முழுமையும் பரவிட வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், ஏராளமான செவிலியர் பள்ளிகளைத் தொடங்கிட வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: செவிலியர் பணி என்பது தொழில் அல்ல, தொண்டு. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவச் சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும் சகிப்புத் தன்மையும் கொண்டு ஆற்றும் மகத்தான சேவை செவிலியர் பணி. செவிலியர்களை போற்ற வேண்டியது நமது கடமை. உலக  செவிலியர் தினத்தில் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Related Stories: