திருபுவனையில் பைக் திருடன் கைது-10 வண்டிகள் பறிமுதல்

திருபுவனை :  புதுச்சேரி நகர பகுதியில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் சமீபகாலமாக  இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இதுதொடர்பாக சீனியர் எஸ்பி  தீபிகாவுக்கு வந்த புகார்களை அடுத்து வாகன சோதனையை தீவிரப்படுத்த  போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் திருபுவனை காவல் சரகத்தில்  இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மேற்பார்வையில் எஸ்ஐ குமாரவேல் தலைமையிலான  போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி-  கடலூர் மெயின்ரோடு மதகடிப்பட்டு எல்லை அருகே சோதனை நடத்திய நிலையில்  அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்த வாலிபரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில்  அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே வண்டிக்குரிய ஆவணங்களை கேட்டனர்.  

அப்போது அவர் ஓட்டிவந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.  இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அதிரடியாக விசாரித்தனர்.  விசாரணையில் அவர் விழுப்புரம், எம்ஜிஆர் வீதி, நாராயணன் நகரைச் சேர்ந்த  வெங்கடேசன் (45) என்பதும், திருபுவனையில் 4, பெரியகடையில் 3, ஒதியஞ்சாலை,  வில்லியனூர், கிருமாம்பாக்கத்தில் தலா 1 பைக்குகளை அவர் திருடி தனது  வீட்டின் பின்புறமுள்ள இடத்தில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.  இதையடுத்து அவர் மீது வழக்குபதிந்து கைது செய்த போலீசார், ஓட்டிவந்த பைக்  மட்டுமின்றி வீட்டில் பதுக்கியிருந்த மேலும் 9 வண்டிகளையும் கைப்பற்றினர்.

 பின்னர் அவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டார். சிறப்பாக செயல்பட்டு பைக் திருடனை பிடித்த திருபுவனை  போலீசார் பார்த்தசாரதி, ரமேஷ் உள்ளிட்டோரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Related Stories: