பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆனவரின் இடத்தில் அமர்ந்து தேர்வெழுதிய மாணவர்: அரசு உதவிபெறும் பள்ளியில் குழப்பம்

சேலம்: சேலத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ஆப்சென்ட் ஆனவரின் இடத்தில் அமர்ந்து பொதுத்தேர்வெழுதிய மாணவரால் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மொழிப்பாட தேர்வு நடந்தது. இதனிடையே, தமிழ் தேர்விற்கு அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆப்சென்ட் ஆனார். அந்த மாணவருக்காக  ஒதுக்கப்பட்ட இடத்தில், அதற்கு அடுத்தபடியாக உள்ள மாணவர் ஒருவர் மாறி அமர்ந்துள்ளார். இதனை சரியாக கவனிக்காத அறை கண்காணிப்பாளர், ஆப்சென்ட் ஆன மாணவருக்கான விடைத்தாளை, மாறி அமர்ந்த மாணவரிடம் வழங்கியுள்ளார்.

சேலத்தில் தேர்வெழுத வராத மாணவர்கள் குறித்து விசாரித்தபோது, தான் தேர்வெழுதியதாக சம்பந்தப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர், இதுகுறித்து விசாரணை நடத்தினார். அப்போது தான் ஆப்சென்ட் ஆன மாணவருடைய விடைத்தாளில், வேறொரு மாணவர் தேர்வெழுதியதும், தேர்வெழுதிய மாணவர் ஆப்சென்ட் என மாற்றி பதிவேற்றம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது தேர்வுக்கு வந்த மாணவருடைய முகப்புத் தாள் மாற்றப்பட்டது. அதேநேரத்தில், தேர்வறையில் அஜாக்கிரதையாக இருந்த அறை கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்,’’ என்றனர்.

Related Stories: