ஆடிட்டர் தம்பதி கொலையில் திடீர் திருப்பம் விசுவாசமாக இருந்த கார் டிரைவர் கொலைக்காரனாக மாறியது எப்படி?

* பரபரப்பு பின்னணி தகவல்கள்: ₹40 கோடி மர்மம் குறித்து கொலையாளியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

சென்னை: சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(60). ஆடிட்டர். இவருக்கு  சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி. படித்தது வளர்ந்தது எல்லாம் அங்கு தான். பிறகு சென்னை வந்த அவர் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு அனுராதா என்ற மனைவியும், சுனந்தா மற்றும் சுஸ்வத் ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகள் மற்றும் மகன் படித்துவிட்டு தற்போது அமெரிக்காவில் நல்ல வேலையில் உள்ளனர். ஸ்ரீகாந்த் திறமையான ஆடிட்டர் என்பதால் பல தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் கணக்குகளை ஆடிட்டிங்க் செய்து வந்தார். இதன் மூலம் அவர், பல கோடி ரூபாய் சம்பாதித்தார். இதுதவிர அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ‘இன்பீம்’ என்ற  பெயரில் சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்திற்கு ஸ்ரீகாந்த் தான் சேர்மனாகவும் இருந்தார்.

இதுபோல் பல தொழில் நிறுவனங்களில் ஸ்ரீகாந்த் இயக்குநராகவும் உள்ளார். இதனால் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் பணம் கொட்டியது. அந்த பணத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் நிலங்கள் மற்றும் மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவில் இரண்டு மாடி கொண்ட பண்ணை வீடு கட்டினார். அளவுக்கு மீறிய சொத்துக்களும், பணமும் சேர்ந்ததால் அதிகளவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஸ்ரீகாந்த் முதலீடு செய்துள்ளார். இதனால் ஸ்ரீகாந்த் அடிக்கடி வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திற்கு சென்று வருவார்.

அப்படி அமெரிக்காவில் இருந்து மனைவியுடன் வந்தவரைத்தான் டிரைவர் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். இதற்கிடையே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஆடிட்டர் தம்பதி உடல்கள் அவரது வாரிசுகளிடம் ஒப்படைக்கும் வகையில் போலீசார் நேற்று சென்னை செனாய்நகரில் உள்ள தனியார் பிணவறையில் வைக்கப்பட்டது. அதன்படி நேற்று நள்ளிவு 1 மணிக்கு ேமல் அமெரிக்காவில் இருந்து ஆடிட்டரின் மகள், மகன் சென்னை வந்தனர். அதை  தொடர்ந்து இன்று காலை அவர்களிடம் போலீசார் முறையாக உடல்களை ஒப்படைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கார் டிரைவர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ராயிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஆடிட்டர் ஸ்ரீகாந்த் கிழக்கு கடற்கரை சாலை சூளேரிக்காடு பகுதியில் 3 ஏக்கர் நிலம் வாங்கி பண்ணை வீடு கட்டினார். அப்போது, நேபாளம் நாட்டை சேர்ந்த லால் சர்மா(70) என்பவர் அடிக்கடி ஆடிட்டரை வந்து பார்த்து வேலை கேட்டு வந்துள்ளார். பார்க்க நம்பிக்கையான நபராக லால் சர்மா இருந்ததால் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் ஒரு நாள் அழைத்து பேசியுள்ளார்.  அப்போது, லால் சர்மா நான் டால்பின்சிட்டி பொழுது போக்கு பூங்காவில் பணியாற்றி வருகிறேன். அங்கு போதிய அளவில் மக்கள் வராததால், டால்பின்சிட்டி நிர்வாக ஆட்கள் குறைப்பு செய்து வருகின்றனர். நான் 4 குழந்தைகளுடன் தற்போது வேலை இன்றி இருக்கிறேன். எனவே எனக்கு உங்கள் பண்ணை வீட்டை பராமரிக்கும் வேலையை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். லால் சர்மா தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வந்து வேலை கேட்டதால் தனது பண்ணை வீட்டில் தங்கி செக்யூரிட்டியாக இருக்க பணியமர்த்தினார். அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளாக லால் சர்மா குடும்பத்தினருக்கும் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் குடும்பத்தினருக்கும் நல்ல பழக்கம் இருந்து வந்தது. லால் சர்மாவும் தனது முதலாளிக்கு நேர்மையாக பணியாற்றி வந்துள்ளார்.

அந்த பழக்கத்தை வைத்து தனது மூத்த மகன் கிருஷ்ணா நல்லா கார் ஓட்டுவார். இதனால் உங்களுக்கு தெரிந்த யாரிடமாவது வேலைக்கு சேர்த்து விடுங்கள் என்று ஆடிட்டரிடம் லால் சர்மா கேட்டுள்ளார். பல ஆண்டுகள் பழக்கம் என்பதால் ஆடிட்டர் தனது வீட்டில் தங்கி காரை டிரைவராக வேலை செய்ய கிருஷ்ணாவை பணியமர்த்தியுள்ளார். அதன்படி கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கிருஷ்ணா ஆடிட்டர் வீட்டை பராமரித்து கொண்டு கார் டிரைவராக வேலை ெசய்து வந்துள்ளார். ஆடிட்டரிடம் வேலைக்கு வருவதற்கு முன்பே கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை கிருஷ்ணா காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதனால் தனது மகன் டார்ஜிலிங் பகுதியில் தனது நண்பர் ரவி ராய் உதவியுடன் படிக்க வைத்துள்ளார். அதன் மனைவியை பிரிந்த பிறகு தான் ஆடிட்டரிடம் கிருஷ்ணா வேலைக்கு சேர்ந்துள்ளார். கிருஷ்ணாவின் தம்பி நேபாளத்தில் உள்ளார். 2 சகோதரிகள் சென்னை அருகே உள்ள போரூரில் நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக கிருஷ்ணா குடும்பத்தினர் ஆடிட்டர் குடும்பத்திற்கு விசுவாசமாக வேலை செய்து வருவதால், ஆடிட்டர் ஸ்ரீகாந்த் தனது குடும்ப நண்பர்கள் போல் கவனித்து வந்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணாவிற்கு ஊதியம் என்று எதுவும் தரவில்லை. ஆனால் புதிய துணிகள் வாங்கி கொடுத்துள்ளனர். ஸ்ரீகாந்த் மகள் மற்றும் மகன் ஆகிய 2 பேரும் கிருஷ்ணாவை தனது சகோதரன் போல் பழகி வந்துள்ளனர். தனது தந்தைக்கு தெரியாமல் கிருஷ்ணாவுக்கு அதிகளவில் பணம் தந்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வரும் போது கிருஷ்ணாவுக்கு புதிய துணிகள் மற்றும் பொருட்கள் வாங்கி கொடுத்து வந்துள்ளனர்.

ஆனால் ரூ.40 கோடி பணம் குறித்து ஆடிட்டர் ஸ்ரீகாந்த் கிருஷ்ணாவிடம் கூறிய பிறகு அவரிடம் மனமாற்றம் ஏற்பட்டு, இனி எவ்வளவு நாட்கள் தான் இப்படி அடிமையாக இருக்கிறது. நாம் பெரிய ஆளாக வரவேண்டாமா என்று திட்டமிட்டுள்ளார். தனது தந்தையை கட்டாயப்படுத்தி நேபாயத்திற்கு கிருஷ்ணா அனுப்பியுள்ளார். அதன்பிறகு பண்ணை வீட்டில் கடந்த 5ம் தேதியே 6 அடி ஆழத்திற்கு தனது நண்பருடன் சேர்ந்து பள்ளம் தோண்டி வைத்துள்ளார். ரூ.40 கோடி பணத்தின் மீதுள்ள ஆசையால் கடந்த 20 ஆண்டுகளாக குடும்ப உறுப்பினர் போல் இருந்து வந்த ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இன்றி கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய மண்வெட்டி பிடியை பண்ணை வீட்டில் இருந்து தான் கிருஷ்ணா மயிலாப்பூர் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். அனைத்தையும் திட்டமிட்டப்படி கிருஷ்ணா செய்து முடித்துள்ளார்.

அதேநேரம், நிலம் விற்பனை தொடர்பாக அனைத்து இடங்களுக்கும் ஆடிட்டருடன் கிருஷ்ணா சென்றுள்ளார். இதனால் நிலம் வாங்கிய நபர்களுடன் கிருஷ்ணாவுக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆடிட்டர் நிலம் விற்பனை முடிந்து மார்ச் மாதம் மீண்டும் அமெரிக்கா சென்ற பிறகு பல முறை கிருஷ்ணாவை நிலம் வாங்கிய நபர்கள் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ஆடிட்டர் மற்றும் அவரது குடும்ப விஷயங்கள் எல்லாம் கேட்டுள்ளனர். அதற்கு கிருஷ்ணாவும் அனைத்து விபரங்களையும் கூறியதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த இரட்டை கொலையில் கார் டிரைவர் கிருஷ்ணாவை தவிர வேறு பலருக்கு தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏன் என்றால் அந்த ரூ.40 கோடி பணம் குறித்து இன்று வரை முழு விபரங்கள் தெரியவில்லை. இதனால் சிறையில் அடைக்கப்பட்ட கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவிராயை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால்  ரூ.40 கோடி பணம் குறித்தும், அந்த பணம் தற்போது எங்கு உள்ளது என்பது குறித்து முழுமையாக தெரியவரும். அதேநேரம், ரூ.40 கோடி பணம் குறித்து ஆடிட்டர் மகன், மகளிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: