தமிழகத்தில் திருத்தேர் ஓடக்கூடிய பகுதிகளில் மின்வயர்களை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: தமிழகத்தில் திருத்தேர்கள் ஓடக்கூடிய பகுதிகளில் மின்வயர்களை புதைவடங்களாக  மாற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக) பேசும்போது, திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி தேர் என்பது மிகவும் பிரசித்திபெற்றது. அந்த தேரின் உயரம் 110 அடிகள். அந்த தேர் 4 வீதிகளில் பவனி வரும்போது மேலே உள்ள மின்சார வயர்களில் பட்டு விபத்துகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அந்த நான்கு வீதிகளில் மட்டும், குறைந்த தூரம்தான் என்பதால் அந்த நான்கு வீதிகளில் மட்டும் புதைவடமாக மாற்றித்தர வேண்டும்” என்றார்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் ஓடும் பகுதிகளில் புதைவடமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது மிக மிக முக்கியமான பணியாகும். எனவே, இந்த ஆண்டு முன்னுரிமை அடிப்படையில் அந்த பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கும்பகோணம் க.அன்பழகன் (திமுக): கும்பகோணத்தில் மொத்தம் 12 தேர்கள் பவனி வருகின்றன. அந்த 12 தேர்கள் போகின்ற இடங்களிலெல்லாம் புதைவடங்களை அமைத்துத் தர வேண்டும்.

அமைச்சர் செந்தில்பாலாஜி: தமிழகத்தில் திருத்தேர்கள் ஓடக்கூடிய பகுதிகளில் புதைவடங்களாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதை இந்து சமய அறநிலைய துறை அமைச்சருடன் கலந்துபேசி, வரும் ஆண்டுகளில் படிப்படியாக ஒவ்வொரு ஆண்டுகளிலும் அதற்குரிய பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Related Stories: