பிளஸ்-2 மாணவர்களை கணித தேர்வுக்கு யூடியூப் மூலம் தயார் செய்யும் அரசு பள்ளி ஆசிரியர்

கோவை :  கோவை அரசு பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் பிளஸ்-2 மாணவர்களை கணித தேர்வுக்கு யூடியூப் மூலம் தயார் செய்து வருகிறார். கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த முதுகலை கணித ஆசிரியர் தமிழ்செல்வன், கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுத்து வந்தார். அப்போது, மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்பதிலும், மீண்டும் படித்த பாடத்தை படிப்பதிலும் சிக்கல் இருப்பதை கண்டறிந்தார்.

இதையடுத்து, ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு யூடியூப் மூலம் பிளஸ்-2 பாடங்களை பதிவு செய்தார். அதன்படி, தற்போது 12-ம் வகுப்பு புத்தகம் அனைத்தும் வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவு செய்துள்ளார்.

தவிர, பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 கணித பாடத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ மூலம் நேரடி வகுப்பில் பங்கேற்கும் அனுபவம் கிடைப்பதாகவும், மிகவும் பலன் உள்ளதாகவும் அரசு பள்ளி மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தவிர, சுமார் 14 ஆயிரம் மாணவர்கள் இவரின் வீடியோவை பார்த்து வருகின்றனர். மேலும், கணிதம் பாடம் குறித்த சந்தேகங்களுக்கும் வீடியோ மூலமாக பதில் அளித்து வருகிறார்.

இது குறித்து ஆசிரியர் தமிழ்செல்வன் கூறியதாவது:

அரசு பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கணித பாடங்கள் குறித்த வீடியோவை maths simplified tamil என்ற யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகிறேன். தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கு ஏற்ப வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, வரை சுமார் 800 வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இப்பணியில் ஈடுபட்டுள்ளேன். வீடியோவாக பதிவு செய்தால் எப்போது வேண்டுமானாலும் மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம் என்பதால் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளேன்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் 23ம் தேதி நடக்கிறது. எனவே, மாணவர்களுக்காக முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் குறித்த தொகுப்புகள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளேன். தற்போது, ஒரு மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் குறித்த வீடியோ உள்ளது. அடுத்த சில நாட்களில் 2 மதிப்பெண், 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் அதன் விடைகள் குறித்த வீடியோ வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் மாணவர்கள் எளிதாக கணிதம் கற்றுக்கொள்ள உதவும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: