புதுகை அருகே தேனூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 700 காளைகள் சீறி பாய்ந்தன

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதையொட்டி கடந்த சில நாட்களாக வாடிவாசல், பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் மேடைகள் அமைக்கும் பணி நடந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர்.

அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இறுதியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை போட்டி போட்டு மாடுபிடி வீரர்கள் அடக்கினர். பல காளைகள் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து களத்தில் நின்று விளையாடியது.

காளைகள் முட்டி காயமடைந்த வீரர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், சைக்கிள், வெள்ளிக்காசு, ரொக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். பாதுகாப்பு பணியில் 250க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories: