நைட் ரைடர்சுக்கு எதிராக லக்னோ ரன் குவிப்பு

புனே: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது. லக்னோ தொடக்க வீரர்களாக டி காக், கேப்டன் கே.எல்.ராகுல் இருவரும் களமிறங்கினர். ராகுல் ஒரு பந்தை கூட சந்திக்காமலேயே பரிதாபமாக ரன் அவுட்டானார். அடுத்து டி காக்குடன் தீபக் ஹூடா இணைந்தார்.

இருவரும் 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 72 ரன் சேர்த்தனர். டி காக் 50 ரன் (29 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி நரைன் சுழலில் மாவி வசம் பிடிபட்டார். ஹூடா 41 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), க்ருணால் பாண்டியா 25 ரன்  எடுத்து  (27 பந்து, 2 பவுண்டரி) ரஸ்ஸல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி கட்டத்தில் ஸ்டாய்னிஸ், ஹோல்டர் சிக்சர்களைப் பறக்கவிட, லக்னோ ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஸ்டாய்னிஸ் 28 ரன் (14 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஹோல்டர் 13 ரன் (4 பந்து, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

மாவி வீசிய 19வது ஓவரில் இவர்கள் 5 இமாலய சிக்சர்களைத் தூக்கியது குறிப்பிடத்தக்கது. கடைசி பந்தில் துஷ்மந்த சமீரா (0) ரன் அவுட்டாக, லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. ஆயுஷ் பதோனி 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா பந்துவீச்சில் ரஸ்ஸல் 2, சவுத்தீ, மாவி, நரைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நைட் ரைடர்ஸ் களமிறங்கியது.

Related Stories: