காக்களூரில் பளு தூக்கும் அகாடமி துவக்கவேண்டும்: பேரவையில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கோரிக்கை

திருவள்ளூர்: தமிழக சட்டப்பேரவையில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பேசியதாவது; தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், கால்பந்தாட்ட குழுக்கள் அதிகம் உள்ள மாவட்டம் ஆகும். ஏற்கெனவே, முதலமைச்சர், துணை முதலமைச்சராக இருந்தபோது அங்கு நேரடியாக வந்து, கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கின்ற வகையில், பல போட்டிகளை நடத்தி, பரிசுகளை வழங்கியிருக்கின்றார். அப்படிப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆவடி, திருவள்ளூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் உலகத்தரம் வாய்ந்த கால்பந்தாட்ட மைதானத்தை அமைத்துத் தர வேண்டும். பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட காக்களூர் கிராமம் என்பது, காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிலேயே முதன்முறையாக பரிசு பெற்ற கருணாகரன் பிறந்த ஊராகும். காக்களூர் அன்பு என்பவர் பளு தூக்கும் போட்டியில் உலகளவில் 2ம் இடத்தில் பரிசுப் பெற்று, 2006-2011ம் ஆண்டு ஆட்சியில், கலைஞரிடம் இருந்து ரூ.10 லட்சம் பரிசும், வீடும் வழங்கினார். அப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த காக்களூர் கிராமத்தில் பளு தூக்கும் பயிற்சி, ஆணழகன் போட்டிக்கு பயிற்சி ஆகியவற்றை நடத்துவதற்கான தகுதிக்கான ஒரு விளையாட்டு அகாடமியை தொடங்கி, ஓர் உள் விளையாட்டரங்கம் அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு பேசினார்.

இதற்கு பதில் அளித்து சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியது; சட்டமன்ற உறுப்பினர், திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆவடி, திருவள்ளூர் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த கால்பந்தாட்ட மைதானம் அமைத்துத் தர வேண்டுமென்று கேட்டிருக்கிறார். முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுசென்று, பரிசீலிக்கப்படும். உறுப்பினர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்ற காக்களூர் பகுதியானது பளு தூக்கும் வீரர்கள், வீராங்கனைகள் நிறைந்த பகுதியாகும். அந்தப் பகுதியில் இருக்கின்ற ஒன்றிய செயலாளரின் மகள் இன்றைக்கு இந்திய அளவிலே சாதனை படைத்திருக்கின்றார். கண்டிப்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, காக்களூர் பகுதியில் பளு தூக்கும் அகாடமி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் இந்தாண்டு பரிசீலிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: