துர்கா பூஜைக்கு சர்வதேச அங்கீகாரம் கங்குலியின் மனைவி ஆடிய நடனத்தை ரசித்த அமித்ஷா: வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டதால் பரபரப்பு

கொல்கத்தா: துர்காபூஜைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்ததைக் குறிக்கும் வகையில், ஒன்றிய சுற்றுலா அமைச்சகம் சார்பில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில்  ‘முக்தி-மாத்ரிகா’ என்ற கலாசார நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய உள்துறை அமைச்சர்  அமித் ஷா கலந்து கொண்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,  பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மனைவியுமான டோனா கங்குலியின் ஒடிசா  நடனக் குழுவின் நிகழ்ச்சி நடந்தது. டோனா கங்குலியின் சிறப்பான நடன நிகழ்ச்சியை அமித் ஷா, கவர்னர் ஜெகதீப் தன்கர் மற்றும் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

தொடர்ந்து சவுரவ் கங்குலியின் இல்லத்தில் அமித் ஷாவுக்கு இரவு விருந்து நடந்தது. அமித் ஷாவின் வருகையை அறிந்ததும், ஏராளமான பாஜக தொண்டர்கள் கங்குலி வீட்டின் முன் குவிந்தனர். இதுகுறித்து கங்குலி கூறுகையில், ‘அமித் ஷா வருகையில் எவ்வித அரசியலும் இல்லை. அமித் ஷாவுக்கு தாவர உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டது. எனக்கு அமித் ஷாவை கடந்த 2008ம் ஆண்டு முதலே தெரியும்’ என்றார். இருந்தும் கங்குலியின் மனைவியின் நடனத்தை பார்த்தது, அவரது வீட்டில் இரவு விருந்தை உண்டது ஆகியன மேற்குவங்க அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Related Stories: